×

ஜேபிஎல் ஸ்பீக்கர்ஸ், 7.1 டால்பி சவுண்ட் வசதியுடன் திருச்சியில் மரியம் சினிமாஸ் தொடக்கம்

திருச்சி, பிப்.7: திருச்சி சங்கிலியாண்டபுரம் மரியம் தியேட்டர் கடந்த 35 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த சினிமா தியேட்டரை முன்னாள் அதிமுக அமைச்சர் மரியம்பிச்சை நிர்வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு மகனும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மரியம் ஆசிக் மீரா கவனித்து வருகிறார். தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப பொதுமக்களின் வசதிக்காக மரியம் தியேட்டர் புதுப்பொலிவுடன், நவீன வசதிகளுடன் மரியம் சினிமாஸ் ஏ.சி. தியேட்டராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நண்பர்கள், பொதுமக்கள், ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மற்றும் அதிமுக நிர்வாகியுமான மரியம் ஆசிக் மீரா மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். நவீன தொழில்நுட்பத்தில் புதிய பொலிவுடன் மரியம் சினிமாஸ் ஏசி தியேட்டரில் 800 பேர் அமர்ந்து திரைப்படத்தை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சீட்டும் புஷ்பேக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய அகன்ற திரை, டால்பி 7.1 சவுண்ட் சிஸ்டம் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தியேட்டரில் அமருவதற்கு சீட்டுகள் தனித்தனியே அமைக்கப்பட்டு இருந்தாலும், குடும்பத்தினர் தம்பதியினர் வந்தால் அமர்வதற்கு என்று தனி சீட்டு வசதி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்கள் நிற்க வசதியாக கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. கேண்டீன் வசதியும், நவீன கழிவறை வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி காலை 11 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி, இரவு 10.15 மணிக்கு காட்சிகள் திரையிடப்படும். டிக்கெட் ஆன்லைனில் புக் மை ஷோ ஆப்பில் சென்று தியேட்டர் சீட்டு புக் செய்யலாம். தற்போது திருச்சி நகரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தியேட்டராக மரியம் சினிமாஸ் தியேட்டர் அமைந்து உள்ளது சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mariam Cinemas ,Trichy ,JBL ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...